நட்சத்திரமானவள்...

காலம் ஒரு
சுழல் கருவி.

நீயே அதன்
அசைவிற்கு
விளக்கேற்றும்
நெடுஞ்சாலை..

கடந்து செல்லும்
அதன் கம்பங்கள்
ஒவ்வொன்றும்,
உனைப் பதிவு
செய்திடும்
எழுத்தாணியாகவே
செல்கின்றன.

காலக் கவிதைக்கு
நீயே கரு..

காலத்தின் குறளுக்கு
நீயே பொருள்..

வான வெளியின்
குறுக்கே வீழும் ஒளி
வில்லின் நிறங்கள்
அத்தனையிலும்,
உன் சிரிப்பே
சிதறிக்கிடக்கின்றன.

பகலுக்கு இருள்
காட்டுபவனும்
நீயே..

இரவுக்கு பகல்
பூட்டுபவனும்
நீயே...

அவிழும் போது வானம்
வெள்ளிக்காடுகளில்
குளிக்கவும்...

குவியும் போது பூமி
பச்சைச் சோலைகளில்
செழிக்கவும்

உன் கண் வெட்டு
ஒன்றே கட்டளைக்
கல் அல்லவா?

காட்டாறாய் பால்வெளி
வீதிகளெங்கும் கட்டின்றிப்
பாய்ந்தோடிக் கிடந்த
காலத்திற்கு,கால்கட்டுப்
போட எல்லைக்கடவை
தந்தவளும் நீயல்லவா?

ஒளியாண்டுகளின் கண்களுக்கு
எட்டிடாத தொலைவின்
தொலைவில்,
ஒன்றல்ல..

கோடி மின்மினிகள்
கண்சிமிட்டிடலாம்,
இந்த வையத்தின்
வாசல் திறந்து வந்து,

உன் அலைக் கைகளினால்
நாளும் என் மண்வாழ்வை
அள்ளி அள்ளி எனை
அமுதால் வளர்ப்பவளே..

உனனை எவரும் சூரியன்
என்று பெயரிட்டு சொந்தம்
போற்றலாம்.

நானோ உன்னை என்
நட்சத்திரம் என்றழைப்பேன்
நன்றியுடன்..

நீ உன்னிடமிருந்தே
பறிக்கப்பட்டதனால்..

நீ உனக்கே
கொடுக்கப்பட்டவளாகும்

இன்று அலை விரித்துக்
ஆடிக் கூவும் ஆழி,
ஒன்றின் அன்றைய
பள்ளத்தாக்கில் முதல்
துளியாய் விழுந்தவள்
நீயல்லவா.?

கடல் செய்வது உனக்குக்
கடுகணைய கைக்கலையாகையால்
வா கடல் செய்யலாம்!

மண்ணிலும் மக்களிலும்
பிசைந்து ஒரு திடலில்
என்றும் ஓயாத அலை
செய்யலாம்...

விண்ணிலிருந்து
மண்ணுக்கல்ல...

மண்ணிலிருந்து
விண்ணிற்கு
எறிக்க...
பூமியில்...
புத்தொளியுடன்...

ஒரு வான
நட்சத்திரம்
நீ மட்டுமே.!


Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72